புதன், டிசம்பர் 18, 2013

திருவாதிரைத் திருநாள்


இன்று திருவாதிரைத் திருநாள்…

திருவாதிரை தினத்தையொட்டி சிவாலயங்களில் இரவு லிங்கோத்பவருக்கு சிறப்பு நீராட்டலும் பின் காலையில் உமையொருபாகனின் சிறப்பு நடன தரிசனத்துடனும் கொண்டாடப்படுவது வழக்கம்.

சிவாலயங்களில் முதன்மையாகக் கருதப்படுவது தில்லையம்பதி. திருவாதிரையன்று காலை இங்கு ஆடப்படுவது ’ஆனந்தத் தாண்டவம்’.

பதஞ்சலி முனிவருக்கு பரத சாத்திரம் அருள ஆண்டவனும் தேவியும் போட்டியிட்டதாகத் தொன்மம் நமக்குக் கூறுகிறது.

தில்லையம்பதியின் தரிசனம் பெற பதஞ்சலி அனந்தீஸ்வரத்தில் இருந்த பொழுது தில்லையின் மற்றொரு பகுதியில் இருந்து சிவனை வணங்கியவர் வ்யக்ரபாதர் என்ற சிவத் தொண்டர். இவர் மனிதத் தலையும் மிருக (புலி) உடலும் கொண்டவர். சில இடங்களில் இவரை புருஷ மிருகம் என்றும் அழைப்பர்.
 
வ்யாசரின் மகாபாரதம் தவிர்த்த ஒருசில மகாபாரதங்களில், குறிப்பாக தமிழ் மகாபாரதத்தில், தருமன் ராஜசூய யாகம் செய்த பொழுது பண்டிதர்கள் ஒரு குறிப்பிட்ட யாகத்தில் புருஷ மிருகம் கலந்து கொண்டால் தான் பலன் தரும் என்று கூற, அவர் புருஷ மிருகத்தை அழைத்துவர பீமனை அனுப்பினார். புருஷ மிருகம் பீமனிடம், அவன் ஓட தான் துரத்துவதாகவும், காட்டின் எல்லைக்குள் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விழுங்குவிடுவதாகவும் அவன் தப்பித்தால் அவன் கட்டளைக்குக் கட்டுப்படுவதாகவும் கூறியது. புருஷ மிருகத்தின் சிவ பக்தியை அறிந்த கண்ணன், பீமனிடம் 12 கற்களைக் கொடுத்து புருஷ மிருகம் அருகில் வரும் பொழுது அவற்றை ஒவ்வொன்றாக வீசச் சொன்னார். அவ்வாறே பீமன் கற்களை ஒவ்வொன்றாக வீச அவை சிவலிங்க வடிவத்தில் இருப்பதைக் கண்ட புருஷ மிருகம் சிவபூஜை செய்து பின் பீமனைத் தொடர, பீமனின் 12 கற்களும் தீர்ந்துவிட்டன. கடைசியில், மிருகம் பீமனை பிடிக்க அவன் உடலின் பாதி மட்டும் காட்டிற்கு உள்ளே இருக்க மீதி காட்டிற்கு வெளியே இருந்தது. முடிவைத் தீர்மானிக்க வந்த தருமன் தம்பி என்றும் பாராமல், காட்டின் உள்ளிருக்கும் பீமனின் உடல் பகுதி  புருஷ மிருகத்திற்கே செந்தம் என நீதி வழங்க, தருமனின் நேர்மையைக் கண்டு புருஷ மிருகம் பீமனை விடுவித்த்து. கண்ணனின் விளையாட்டைக் கண்ட புருஷமிருகம் ஹரியும் சிவனும் ஒன்று என்றுணர்ந்து இருவருக்குமான சங்கரநாராயணன் கோவிலைக் கட்டியதாகக் கூறுவர். திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் தான் அது என்பது அக்கோவிலின் தல வரலாறு.

திங்கள், டிசம்பர் 16, 2013

மார்கழி – அகரஹாயணம்




'மாதங்களில் நான் மார்கழி' என்பது இறை வாக்கு.

நம் இந்திய வானியலில் பால்வீதி மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்தியத் தொன்மங்கள் மற்றும் சமய நூல்களில், பால்வீதியின் மையத்தில் விஷ்ணு சயனித்திருப்பதாகக் கூறப்படுவது நாம் அனைவரும் அறிந்த்தே.

இந்தப் பால்வீதி இருப்பது ரிஷப ராசிக்கும் மிதுன ராசிக்கும் இடையில் தான். மிதுன ராசியின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம் ஆகியவை.
 
 இந்த மாதத்தின் வானவெளியில் Orion (ஓரியன்) என்ற வேட்டுவனை நாம் காண முடியும். இந்தியத் தொன்மத்தில் இது பிரஜாபதியைக் குறிக்கும். பிரஜாபதியின்  தோள் பட்டை இருக்கும் இடத்தில் உள்ள நட்சத்திரம் தான் திருவாதிரை.  இந்திய தொன்மத்தில் பிரஜாபதி விடையாட்டின் தலையைக் கொண்டவர். இவர் தலைப் பகுதியில் இருக்கும் ஐந்து நட்சத்திரங்கள் மிருகத் தலை வடிவைக் கொண்டுள்ளன. அதுவே மிருகசீர்ஷம் (மிருகம் + சிரஸ்).  பிரஜாபதியின் இடுப்பில் (திரிசூலத்தால் குத்தப்பட்ட துளை போல மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. அவை முறையே அக்னி, சோமன், விஷ்ணு ஆகியோரைக் குறிக்கும். பால்வீதிக்கு அருகில் இந்த நட்சத்திரம் உள்ளதால் இது விஷ்ணு-வாகக் குறிப்பிடப் பட்டிருக்கலாம்.

பால கங்காதர திலகர் தன் ருக் வேத ஆராய்ச்சியில் இந்த ஒரியன் தோன்றும் மாதமே முதல் மாதமாகக் குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார். அவர், ருக் வேதம்  சுமார் கி.மு. 4000 வருட வாக்கில் ருக் வேதம் தோன்றியிருக்கலாம் என்று கருதினார். இதற்கு ஆதாரமாக அவர் கூறுவது என்னவெனில் மற்ற மாதங்களின் பெயர்கள் அந்தந்த பௌர்ணமிகளின் நட்சத்திரங்களின் பெயரில் குறிப்பிடப்பட மார்கழி மட்டும் மார்கசீர்ஷம் /அகரஹாயணம் என்று குறிப்பிடப்படுவதைக் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை மார்கசீர்ஷம் என்பது வெறும் மிருகசீர்ஷ நட்சத்திரத்தைக் குறிக்கவில்லை.  மார்கம் என்றால் பாதை; சிரஸ் என்றால் தலை (அ) ஆரம்பம் – எனவே, மார்கசீர்ஷம் என்றால் பாதையின் ஆரம்பம் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து. இதற்குச் சான்றாக சில இடங்களில் மார்கழி, அகரஹாயணம் - அகரம் என்றால் முதல்; அயணம் என்றால் சூரியன் செல்லும் பாதை – என்று குறிப்பிடப்படுவதைக் காட்டுகிறார்.

சூரியனின் அயனம் (equinox) சுமார் கி.மு. 4000 வருடத்தில் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் இருந்தது. அதனால், அந்த சமயத்தில் தான் ருக் வேதம் தோன்றியிருக்கக் கூடும் என்று அவர் கருதினார்.  

சாதாரணமாக விவசாயிகள் விதை விதைக்க சரியான நேரமாகக் கருதுவது கார்த்திகையின் பின் பகுதியையே. அக்னிபுராணத்தில் ‘முஷ்டிக்ரஹானம்’ என்ற ஒரு பண்டிகை/கொண்டாட்டம் குறிப்பிடப்படுகிறது. இது விளைந்த பயிரை அறுவடைச் செய்வதற்கு முன் செய்வது. சந்தனம், பூ, பழம் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்து முதல் கதிரை அறுத்து ஈசான மூலை வழியாக தலைமேல் தூக்கி வீடு செல்வர். பிறகு, அகரஹாயனத்தில் நவான்னம் (புத்தரிசி) படைத்துக் கொண்டாட வேண்டும் என்று கூறுகிறது.  

மாதங்களில் முதலான மார்கழியைக் கொண்டாடுவோம்.

ஞாயிறு, நவம்பர் 17, 2013

கார்த்திகைப் பெண்டிரும் ரிஷி பத்தினிகளும்



இன்று கார்த்திகை!

க்ருத்திகா என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘அறுத்தல்’ அல்லது ‘வெட்டுதல்’ என்று பெயர்.

கார்த்திகை நட்சத்திரம் என்றால் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட ஒரு நட்சத்திரக் கூட்டம் ஆகும். ஆறு மிக ஒளிர்ந்த நட்சத்திரங்களைத் தவிர நெபுலாவும் சில ஒளி குறைந்த நட்சத்திரங்களும் உள்ளன.

கார்த்திகைப் பெண்டிர் அறுவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அறுவர் என்றால் ஆறு பேர்களா? அல்லது அறுத்து/வெட்டி விடப் பட்டவர்களா? ஆறு பேர் என்றால் இவர்கள் யார்?

புராணங்களிலும் தொன்மங்களிலும் இவர்களைப் பற்றி வெவ்வேறான கதைகள் கூறப்படுகின்றன.

க்ரேக்கத் தொன்மத்தைப் பொறுத்தவரை கார்த்திகை ‘ப்லெயடெஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்த ப்லெயடெஸ்-கள் மொத்தம் எழுவர். இவர்கள் உலகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் அட்லஸுக்கும் கடல்தேவதையான ப்லெயொன்க்கும் பிறந்தவர்கள்.  இவர்களின் பெயர்கள் மயா, எலெக்ட்ரா, அல்சியான், டெகெட், அஸ்ட்ரோப், சிலியானோ, மெரோப். வேட்டுவனான ஆரியன் (மிருகசீரிஷ நட்சத்திரம்) இந்த ப்லெயடெஸ் தேவதைகளின் மீது இச்சைக் கொண்டு இவர்களை மீண்டும் மீண்டும் அணுக, அவர்களின் தோழியான ஆர்டெமிஸ்  க்ரேக்கரகளின் இந்திரனான ஜியஸை இப்பிரச்சனையில் தலையிடுமாறு கோரியது. ஜியஸ் இவர்களை புறாக்கூட்டமாக மாற்ற, அவர்கள் பறந்து சென்று தனி நட்சத்திரக் கூட்டமாக மாறினர். ப்லெயடெஸ்-இல் இளையவளான மெரோப், பின்னர் ஸிஸிஃபஸ் என்ற மனிதனுடன் (கோரிந்த்-இன் மன்னன்) உறவு கொண்டதால் தன் ஒளியை ஒடுக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு தொன்மத்தில் ட்ராய் நகரின் வீழ்ச்சியால் அந்நகரின் மூதாதையான எலெக்ட்ரா (ட்ராய் மன்னன் ப்ரியம் ஹெக்டர், பாரிஸ் ஆகியோரின் தந்தை எலெக்ட்ராவின் கொள்ளுப்பேரன்) சோகத்தில் வால் நட்சத்திரமாக மாறி வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மகாபாரதக் கதையின் படி, அக்னி தெவன் சப்தரிஷிகளின் மனைவியர் மீது மோகம் கொள்ள அக்னிதேவனின் மனைவியான ஸ்வாஹா தன் உருவை ஸப்தரிஷிபத்தினிகளின் உருவாக மாற்றிக் கொண்டு அவனுடன் இணைய முடிவுகொண்டாள். ஆறு ரிஷிகளின் மனைவியின் உருவம் எடுக்க முடிந்த அவளால் வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் உருவத்தை மட்டும் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் அருந்ததியின் பத்தினித் தன்மை. இதையறிந்த மற்ற ரிஷிகள் தங்கள் மனைவியரை ஒதுக்கிவைத்தனர். இவர்களே கார்த்திகைப் பெண்களாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அருந்ததி மட்டும் தன் கணவர் வசிஷ்டருடன் இருக்கிறாள்.

[இரவில் வானத்தில் தெரியும் சப்த ரிஷி மண்டலத்தில், காற்றாடியின் வால் பகுதி போல் நீண்டிருக்கும் மூன்று நட்சத்திரங்களில் நடுவில் இருப்பது தான் வசிஷ்டர்; அதை ஒட்டியே அருந்ததி நட்சத்திரம் இருக்கிறது]

தைத்ரீய ப்ராஹ்மனத்தில் இவர்களின் பெயர்கள் அம்பா, துலா, நிதானீ, அப்ரயந்தீ, மேகயந்தி, வர்ஷ்யந்தி, சுபானிகா என்று குறிப்பிடப்படுகிறது. சதபத ப்ராஹ்மனத்திலும் கார்த்திகை நட்சத்திரம் சப்தரிஷிகளின் பத்தினி என்றும், ஆனால் இது எப்போதும் கிழக்கில் உதிக்கும் என்றும் - வடக்கில்  துருவ நட்சத்திரத்தை ஒட்டி இருக்கும் - சப்தரிஷி மண்டலத்திலிருந்து விலகி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ புராணம்/ ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் முருகன் பிறந்த கதை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

தாட்சாயினி தேவி தட்சனின் யாகத்தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டதும் சிவபெருமான் சதிதேவியின் உடலைக் கையில் எடுத்து ஊழித்தாண்டவம் ஆட, சதிதேவியின் பூத உடல் இருக்கும்வரை சிவனின் கோபத்தைத் தணிக்க இயலாது என்பதை உணர்ந்த திருமால் தன் சக்கரத்தால் அவ்வுடலைத் துண்டாக்கினார். [அவை விழுந்த இடங்கள் அனைத்தும் 108 சக்தி பீடங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.] சதிதேவியின் உடல் மறைந்த பின் சிவபெருமான் தனிமையில் நீண்ட தவத்தில் கண்மூடி அமர்ந்துவிட்டார்.

சிவபெருமான் நீண்ட தவத்தில் இருந்ததால், அவருக்கு மகன் பிறக்க வாய்ப்பில்லை என்று எண்ணி, தாரகாசுரன் தன் இறப்பு சிவனின் மகனால் ஏற்பட வேண்டும் என வரம் வாங்கியிருந்தான்.

சதிதேவி ஹிமவானின் மகள் பார்வதியாக அவதரித்தாள். அவள் சிவ பெருமானை மணக்கக் காத்திருக்க, அவர்களை இணைக்க காமதேவன் மலர்கணை எய்து சிவனின் நெற்றிக் கண் பெறியினால் தீக்கிரையானான்.

சிவனின் விந்துத் துளிகள் சில பூமியில் சிந்த, அதனால் ஏற்பட்டும் வெப்பத்தாலிருந்து உலகைக் காக்க பிரமன், அக்னித்தேவனை அதை எடுத்துக்கொள்ளப் பணித்தார்.

ஸ்கந்த புராணத்தின் படி, அக்னி அதன் வெப்பத்தைத் தாளாமுடியாமல் தவிக்க பிரமன் அதை குளிர்காய வரும் பெண்ணிடம் அதைக் கொடுக்கக் கூறினார். கார்த்திகைப் பெண்கள் முதலில் வர அவர்களின் உடலில் அந்த வீரியத்தை அக்னி செலுத்த அந்த அறுவருக்கும் குழந்தைகள் பிறந்தனர்.

சிவபுராணத்தில், இது சற்று மாறுபட்டு வெப்பம் தாள முடியாத அக்னி, சிவனின் வீரியத்தை கங்கையில் இட்டதாகவும் அது அங்கிருந்து ஸரவனத்தில்  (நாணல் காடு) ஆறு தாமரைகளில் அவற்றைச் சேர்த்ததாகவும் அங்கு தோன்றிய குழந்தையைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததாகவும் கூறுகிறது.

க்ரேக்க தொன்மத்த்தின் ஏழு ‘ப்லெயடெஸ்’ சகோதரிகளில் மூத்தவள் மயா என்று பார்த்தொம். அவளுக்கும் க்ரேக்கர்களின் இந்திரனான ஜீயஸுக்கும் பிறந்தவன் ஹெர்மஸ். இந்த ஹெர்மஸின் சின்னம் சேவல்; அவன் கையில் பிடித்திருக்கும் தண்டத்திற்கு கெரிகியான் (Kerykeion) என்று பெயர். இந்த கெரிகியான் கடூஸியஸ் – Caduceus (சேவல் சிறகு கொண்ட தண்டத்தில் இரண்டு பாம்புகள் சுற்றியிருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்) – என்றும் அழைக்கப்படும். [இது தவறுதலாக இது தற்போது மருத்துவர்கள் சின்னமாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தத் தவறு ’ஆஸ்க்லியன் தண்டம்’ பாம்பால் சுற்றப்பட்டது என்பதால் ஏற்பட்டது. ஆஸ்கிலபஸ் க்ரேக்கர்களின் மருத்துவ கடவுள்; அவர் தண்ட்த்தில் ஒரு பாம்பு தான் இருக்கும்; சிறகுகள் கிடையாது. அமெரிக்க ராணுவத்தின் மருத்துவப் பிரிவு முதல் முதலாக இந்த்த் தவறைச் செய்ததால் அதுவே பிரபலமாகிவிட்டது]. இந்த ஹெர்மஸ் உள்நோக்கிப் பயணிப்பவரின் வழிகாட்டி (Guide to inner journey) என்று க்ரேக்கர்களால் வணங்கப்படுகிறான். இந்த ஹெர்மஸின் சிலைகளில் ஆண்குறி மிகவும் பிரதானமாகக் குறிக்கப்பட்டிருக்கும்.


முருகனுக்கு குஹன் என்ற பெயரும் உண்டு. குஹன் என்றால் உள்ளில் மறைந்து இருப்பவன் என்ற பொருள் உண்டு. முருகனின் குருகுஹன் என்ற பெயருக்கும் இந்த ஹெர்மஸ்-க்கும் உள்ளத் தொடர்பு மிகவும் வியப்பளிக்கிறது!


செவ்வாய், செப்டம்பர் 17, 2013

கொல்லம் ஆண்டு



கொல்லம் ஆண்டு!

இதன் மற்றொரு பெயர் மலபார் ஆண்டு.  இது கேரளத்தின் மலபார் பகுதியில் வழக்கத்தில் இருக்கும் ஆண்டுக் கணக்காகும்.

பெரும்பாலான இந்திய வருடங்கள் இது கீழ் காணும் வழிமுறைகளில் வேறுபடுகிறது…

1.            பெரும்பாலான இந்திய ஆண்டுகள் சந்திரமான முறையையோ சந்திர-சௌர முறையையோ அடிப்படையாகக் கொண்டவை;
2.            பெரும்பாலும் அவை மேஷாதி (மேஷ ராசியை ஆரம்பமாகக்)  கொண்டவை.
3.            இந்திய ஆண்டுகளின் எண்ணிக்கை நிறைவடைந்தவற்றைக் குறிப்பவை (உதாரணமாக தற்போது சக ஆண்டு 1935 என்பது 1935 ஆண்டுகள் முடிந்து 1936-ஆவது வருடம் நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் குறிக்கும்.

ஆனால், கொல்லம் ஆண்டு என்பது முழுக்க முழுக்க சௌரமானத்தை (சூரியனை) அடிப்படையாகக் கொண்டது. இதன் ஆரம்பம் சிம்ம ராசியில் இருந்துத் துவங்கும். இதன் ஆண்டு எண்ணிக்கை நடப்பு ஆண்டின் எண்ணிக்கையைக் குறிக்கும். அதாவது, ஆண்டு எண்ணிக்கையை பூஜ்ஜியத்திலிருந்துத் துவக்காமல் ஒன்றிலிருந்துத் துவக்குவர். அதாவது, ஆங்கில முறைப்படி 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் என்றால் 2012 ஆண்டுகள் முடிந்து 2013ஆவது ஆண்டு தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்று கணக்கிடுவது போல் தற்போது நடக்கும் ஆண்டின் எண்ணிக்கையையே கொல்லம் ஆண்டிலும் கூறுவர்.

’கடபயாதி’ முறை என்றழைக்கப்படும் இந்த முறையின் ஆரம்பம் தொன்மங்களில் பல்வேறு வழிகளில் கூறப்பட்டாலும் வரலாற்று ரீதியாக மேற்குக் கேரளக் கரையோர மன்னன் உதய மார்த்தாண்ட வர்மன் முன்னிலையில் அவரது தலைநகரான கொல்லத்தில் வானவியல் நிபுணர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு அதிகார பூர்வமாக ஏற்கப்பட்டது.

இம்முறை கி.பி. 824-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் நாளிலிருந்து துவங்கியது. ஆனால், வட கேரளத்தில் இது சிம்ம மாதத்தில் துவங்காமல் கன்னி மாதத்தில், அதாவது செப்டம்பர் 25 ஆம் நாளிலிருந்து துவங்கியது. பின்னர், ஜூலியன் ஆண்டிற்கும் க்ரெகேரியன் ஆண்டிற்கும் சமநிலை ஏற்படுத்த 10 நாட்கள் கணக்கிலெடுக்கப்படாமல் விட்ட பொழுது இந்த ஆண்டின் துவக்கம் ஆகஸ்ட் 15/செப்டம்பர் 15 ஆம் நாளுக்கு மாற்றியமைக்கப்பட்டது. சூரியனை அடிப்படையாகக் கொண்டதால் இதன் மாதங்கள் நம் தமிழ் மாதங்களைப் போலவே சங்கராந்தியை (அதாவது சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு மாறுவதைக்) கொண்டு கணக்கிடப்படும்.

’கடபயாதி’ முறை என்றால் என்னவென்பதைப் பார்ப்போம்…

வடமொழியைப் போலவே மலயாளத்திலும் க்ரந்தத்திலிலும் க, ச, ட, த, ப ஆகிய வல்லின எழுத்துக்கள் நான்கு விதமாக ஒலிக்கப்படும். அந்த எழுத்துக்களை தசம எண்களுக்கு மாற்றாகக் கொண்டு எண்ணும் பொழுது அவை கீழ்கண்டவாறு அமையும்

1        2          3        4          5         6        7            8          9        0
க       க்க     க      க்க     ங       ச        ச்ச       ஜ       ஜ்ஜ   ஞ 

ட       ட்ட    ட      ட்ட   ண      த       த்த        த      த்த    

ப       ப்ப      ப      ப்ப     

ய       ர        ல       வ       ஸ      ஷ    ஷ்ஷ  ஹ     ழ

இதில் நாட்களைக் குறிக்க இந்த எழுத்து முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.
            
தொன்மத்தின்படி சங்கராச்சாரியாரால் கொல்லம் ஆண்டு கன்னி மாதத்தைத் துவக்கமாகக் கொள்ள வேண்டும் என்றுகூறியதாகவும் அதையே தெய்வ வாக்காகக் கொண்டுத் துவக்கப்பட்டதாகக் கூறுவர்.

‘ஆசார்ய வாகா பேதயா’ என்ற பிரபலமான வாக்கியம் உண்டு.

சாதாரணமாக இந்த வாக்கியத்தின் பொருள் ’ஆசாரியரின் (சங்கரரின்) வாக்கே சட்டம்’ என்பதாகும். இதையே ‘கடபயாதி’ முறையில் எண்களாக மாற்ற அது கீழ்காணும் எண்ணைக் குறிக்கும்.

0           6          1          4        3          4                 1
ஆ      சார்    ய       வா     கா      ப்பேத         யா

’கடபயாதி’ முறையில் மற்றொரு விதியும் உண்டு. அது என்னவெனில் வாக்கியமாக மாற்றிய எண்களை அப்படியே எழுதாமல் பின் வரிசையில் எழுத வேண்டும் என்பதே. அதன்படி இந்த வார்த்தை 1434160 என்ற எண்ணைக் குறிக்கும். கலியுகத்தின் 1434160-ஆவது நாளைக் கணக்கிட்டால், அது கி.பி. 824, செப்டம்பர் 25ஐக் குறிக்கும். இந்த நாளே வட மலபார் பகுதியின் கொல்லம் ஆண்டுத் துவக்க நாளான கன்னி மாதத்தின் முதல் நாள்.

இன்று இந்த கன்னி சங்கராந்தி நாள்.