செவ்வாய், ஜனவரி 01, 2013

புத்தாண்டு வாழ்த்துகள்


அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்…

முதலில் புத்தாண்டு எப்பொழுதுத் துவங்குகிறது? என்பதைப் பார்ப்போம்.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ் புத்தாண்டு என்பது தைமாதம் துவங்குகிறதா? அல்லது சித்திரை மாதம் துவங்குகிறாதா? என்ற விவாதம் அனைத்து இடங்களிலும் நடப்பதைக் கண்டு வருகிறோம். அதே நேரம் ஆங்கிலப் புத்தாண்டு என்றால் அது ஜனவரி மாதம் முதல் தேதி என்று அனைவரும் எந்த பேதமும் இன்றிக் கொண்டாடுகிறோம்.

ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு என்பது ஜனவரி மாதம் 1-ஆம் தேதி தான் துவங்குகிறது என்பது நிச்சயமாகத் தெரியுமா? இதன் வரலாறு தான் என்ன?

சற்றுத் திரும்பிப் பார்ப்போம்…

ஆண்டு, மாதக் கணக்குகள் ஏதேனும் ஒரு நாட்காட்டியின் அடிப்படையில் தான் கணிக்கப்படுகின்றன. ஆங்கில நாட்காட்டி என்றவுடன் நாம் அது ஆங்கில மொழி தோன்றிய இங்கிலாந்தின் நாட்காட்டி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. கூறப்போனால், இது ஆங்கில நாட்காட்டி என்பதைவிட இதைச் சர்வதேச நாட்காட்டி என்று தான் கூற வேண்டும். இது க்ரிகேரியன் நாட்காட்டி-யை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக, தங்கள் நாட்டுக்கெனத் தனித்தனியே வெவ்வேறு நாட்காட்டிகளைக் கொண்ட நாடுகள் தங்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் மற்றும் ஒப்பந்தகள் ஆகியவற்றுக்கு இந்த நாட்காட்டியையே பயன்படுத்துகின்றன.

இந்த க்ரிகேரியன் நாட்காட்டி வழக்கத்திற்கு வந்ததே 16-ஆம் நூற்றாண்டில் தான். இது கிருஸ்துவர்கள் (குறிப்பாகக் கத்தோலிகர்கள்) தங்கள் ஈஸ்டர் பண்டிகையைச் சரியாகக் கணிக்க வடிவமைக்கப்பட்டது. முதலில் வெவ்வேறு கத்தோலிகக் குழுக்களாலேயே  நீண்ட சர்ச்சைக்குள்ளான இந்த நாட்காட்டி பின்னர் படிப்படியாக பெரும்பாலான நாடுகளால் ஏற்கப்பட்டது.

இது பெருமளவில் ரோம சாம்ராஜ்ஜியத்தின் ஜூலியன் நாட்காட்டியின் அடிப்படையிலேயே (சில வேறுபாடுகளுடன்)த் தயாரிக்கப்பட்டது. கிமு-222 ஆண்டிற்கு முன் வரை புத்தாண்டு மே மாதம் முதல் தேதியில் கொண்டாடப்பட்டு வந்துள்ளதாகக் கூறுகின்றனர். கிமு-222 ஆண்டு முதல் கிமு.153 ஆம் ஆண்டு வரை புத்தாண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. கிமு.153-ஆம் ஆண்டு முதல் புத்தாண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. கிமு.45 ஆம் ஆண்டு முதல் ஜுலியன் நாட்காட்டி அமலுக்கு வந்த பின்னரும் பல்வேறு நாடுகளில் பல்வேறு அரசுகள் ஆண்டுத் துவக்கத்தை மாற்ற முயன்றும் (கணக்கு வழக்கு ஆண்டுகளை மாற்றிய போதும்) மக்களைப் பொறுத்தவரை பொது ஆண்டின் துவக்கம் ஜனவரி 1-ஆம் தேதியாகவே இருந்து வருகிறது.

இந்தியர்களைப் பொறுத்தவரை ஜனவரி முதல் தேதியை கிருத்துவ ஆண்டின் துவக்கம் என்றும் கூறுவோம். ஆனால், 10-17 நூற்றாண்டுகள் வரை பல்வேறு (ஐரோப்பிய) நாடுகள் கிருத்துவ மதாலயங்களின் ஈர்ப்பால்/தூண்டுதலால் தங்கள் நாடுகளின் ஆண்டு துவக்கத்தை டிஸம்பர்-25, மார்ச்-25 (தேவமாதா கருவுற்ற நாள்), ஈஸ்டர் ஆகிய நாட்களுக்கு மாற்ற முனைந்ததும் நடைபெற்றுள்ளது.  க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாறியவுடன் பெரும்பாலான நாடுகள் ஜனவரி முதல் தேதியையே மீண்டும் ஆண்டுத் துவக்கமாகக் கொண்டன.

ஜூலியன் நாட்காட்டிக்கும் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் இடையில் ஒவ்வொரு நானூறு ஆண்டுகளுக்கும் மூன்று நாட்கள் வித்யாசம் உண்டு. க்ரிகேரியன் நாட்காட்டியில் 1700,1800,1900 ஆகிய ஆண்டுகள் லீப் வருடமாக இல்லாமல் சாதாரண ஆண்டாக (அதாவது, பிப்ரவரியில் 28 தேதிகளுடன் 365 நாட்கள் கொண்டு) இருக்கும். இதனால், கத்தோலிகத் திருச்சபையால் 16-ஆம் நூற்றாண்டில் (1582-இல்) ஜூலியன் நாட்காட்டியிலிருந்து 10-நாட்கள் நீக்கப்பட்டன. 1582-ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி (விழாயக் கிழமைக்கு) அடுத்த நாள் அக்டோபர் 15 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) என்று குறிக்கப்பட்டு க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றப்பட்டது.

ஆனாலும் பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் 17-18 ஆம் நூற்றாண்டில் தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கும் மாற்றம் செய்து கொண்டன.

ஆங்கில மொழியின் தாய்நாடான இங்கிலாந்தில் 1752-ஆம் ஆண்டு தான் க்ரிகேரியன் நாட்காட்டிக்கு மாற்றம் செய்ய தீர்மானிக்கப் பட்டது. அப்பொழுது 11 நாட்கள் குறைக்கப்பட வேண்டியிருந்தது.  11 நாட்களைத் திருப்பிக் கொடு’ என்பது போன்ற போராட்டங்களும் ஏற்பட மாற்றம் 1800-க்குத் தள்ளிப் போனது. (அப்பொழுது 12 நாட்கள் குறைக்க நேரிட்டது). பழைய நிதி ஆண்டின் துவக்கமான மார்ச்-25 (பெருமாட்டி தினம்) இலிருந்து ஏப்ரல் -6 ஆம் தேதிக்கு நிதி ஆண்டு மாற்றப்பட்டது.

ரஷ்யாவின் க்ரிகேரியன் ஆண்டு 1917-இல் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் ஏற்கப்பட்டது. கூறப்போனால் அதை அக்டோபர் புரட்சி என்பதே தவறு. ஏனெனில், புரட்சி நடந்தது ஜூலியன் வருடத்தின் அக்டோபர் மாதம்; ஆனால் க்ரிகேரியனில் அப்பொழுது நவம்பர் ஆரம்பம் ஆகிவிட்டது. 1918-இல் ஜனவரி-31 ஆம் தேதிக்குப் பின் பிப்ரவரி-14 ஆம் தேதியாக மாற்றப்பட்டது.

எப்படி இருந்தாலும் தற்போது பெரும்பாலான நாடுகளில் (மதச் சடங்குகளைத் தவிர்த்த விஷயங்களில்) இந்த க்ரிகேரியன் நாட்காட்டிகள் வழக்கத்திற்கு வந்துவிட்டபடியால் ஜனவரி முதல் தேதியே புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! 


16 கருத்துகள்:

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்ரீனி!
    உங்கள் பதிவுகளில் எப்போதுமே தகவல்கள் கொட்டிக் கிடக்கும். இந்தப் பதிவிலும் வெறும் புத்தாண்டு வாழ்த்துக்களைக் கூறாமல் தகவல்களுடன் கொடுத்து அசத்திவிட்டீர்கள்.
    வரும் வருடத்திலும் இதே போல பல பதிவுகள் எழுதி பல தெரியாத விஷயங்களைத் தெளிவுபடுத்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. க்ரிகேரியன் நாட்காட்டியா புதிய தகவல்கள் பகிர்ந்தமைக்கு நன்றிங்க. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. புத்தாண்டில் புத்தாண்டு பற்றிய தகவல்.எது அறிவியல் முறைப்படி சரியோ அதுவே நிலைத்து நிற்கும்.
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. தகவல்களுக்கு பாராட்டுக்கள்..

    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

  6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் மதுரைத் தமிழரே!

      நீக்கு
  7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஸ்ரீனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் கணேஷ்!

      நீக்கு